×

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஆந்திராவில் நீர்வழி விமான சேவை... அசத்தும் சந்திரபாபு நாயுடு

 

ஆந்திராவில் முதல் முறையாக நீர்வழி விமான சேவை நாளை  முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராமோகன் நாயுடு தொடங்கி வைக்க உள்ளார்.

ஆந்திர அரசு முதல் முறையாக விஜயவாடாவில் கிருஷ்ணா நதி மத்தியில் அமைந்துள்ள பிரகாசம் அணையில்  இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவை சோதனை முறையில்  நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்துத் துறை  அமைச்சர் ராம்மோகன் நாயுடு இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். இதற்காக நாளை விஜயவாடா பிராகசம் அணையில் இருந்து இருவரும் நீர்வழி விமானத்தில் ஏறி ஸ்ரீசைலம் செல்ல உள்ளனர்.  மீண்டும் அதே விமானத்தில் விஜயவாடா வர உள்ளனர். ஒரே விமானத்தில் நீரிலும் , ஆகாயத்திலும் பறக்கும் புது அனுபவத்தை வழங்கும் விதமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த விமான சேவையை சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. இதற்காக நிபுணர்கள்   வழிகாட்டுதலின்படி  விஜயவாடா கிருஷ்ணா நதி கரையில் இருந்து இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. 

முதல்வர் சந்திரபாபு, மத்திய அமைச்சர் பயணம் செய்யும் இந்த நீர்வழி விமான சேவையில்  ஸ்ரீசைலம் செல்வதை காண   1000 பேர் பார்வையாளர்கள் காணும்  வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஜயவாடா நகர காவல் ஆணையர்  ராஜசேகர பாபு தெரிவித்தார். இந்நிலையில் விஜயவாடா கிருஷ்ணா நதியில் இருந்து புறப்பட்ட நீர்வழி  விமானம் சோதனை ஓட்டம் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தை அடைந்தது. பின்னர்  விஜயவாடாவிற்கு  அதிகாரிகள் பயணம் செய்து சோதனை ஓட்டம் நடத்தினர்.  இந்நிலையில், முதல்வர் வருகையையொட்டி, ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 ஸ்ரீசைலம் அணை பின்புறம்  சுற்றியுள்ள காடுகளில் மாவோயிஸ்ட் சிறப்பு தனிப் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் அதிவேக என்ஜின் படகுகளில் மீட்புக் குழுவினர் , என்.டி.ஆர்.எப்   குழுவினர் தொடர் ரோந்து பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.  முதல்வர் சந்திரபாபு வருகைக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ராஜகுமாரி, எஸ்பி ஆதிராஜ் சிங் ராணா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.