×

#BREAKING முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு..  

 

 டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்துள்ளார். 

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்தார். சுமார் 155 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த  அரவிந்த் கெஜ்ரிவால், நேற்றைய தினம் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அதனை தொடர்ந்து இன்றைய தினம் டெல்லி நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார். 

அப்போது,  சிபிஐ , அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானது தற்போது இந்தியாவில் உள்ள பாஜக ஆட்சி என்றும் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி காட்சியை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டே தன்னை பாஜக ஆட்சி கைது செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.  

இரண்டு தினங்களில் தான் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். டெல்லி மக்கள் மீண்டும் தன்னை தேர்தலில்  வெற்றி பெறச் செய்தால்,  மீண்டும் ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். வேண்டுமென்றே தன்னை கைது செய்திருக்கிறார்கள் என்றும், நான் உண்மையானவன்;  எந்த தவறும் செய்யாத நிரபராதி; நியாயமானவன் என்பதனை உங்கள்(மக்கள்) முன் நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரித்தார்.  அதற்காக டெல்லி சட்டமன்றத்தை கலைக்க முடிவு செய்து இருக்கிறேன் என்றும்,  முன்கூட்டியே தேர்தலை சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். 

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி  தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு முதல் முறையாக டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். 2015ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர்,  சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் 2020 பிப்ரவரி 15ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார் கெஜ்ரிவால்.  

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி தலைமைச் செயலகத்திற்கு செல்லக்கூடாது;  முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது;  துணைநிலை சபாநாயகருக்கு அனுப்ப வேண்டிய கோப்புகளை தவிர வேறு எந்த கோப்புகளிலும் அவர் கையெழுத்து விடக்கூடாது என்கிற பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனைச்சுட்டிக்காட்டி  அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்ததால், தற்போது பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.   2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், கெஜ்ரிவால் பதவி விலகினால் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்புள்ளது.