அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கும் பணி நடைபெற்று வந்தாலும், அதே சமயம் நேரில் காண வாய்ப்பில்லா மக்கள் நேரடியாக விழா சம்பவங்களை காணும் வசதியும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதை தேசிய விழா எனக் குறிப்பிட்டு அன்று மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார். இதேபோல் டாக்ஸி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், சுற்றுலா பயணிகளுடன் நன்றாக நடந்து கொள்ளவும், சீருடைகளை கட்டாயமாக அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் பயணிகளிடம் குறிப்பிட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.