×

பாஜக வறுமையை ஒழித்து வருகிறது - பிரதமர் மோடி

 

நாட்டில் வறுமையை பாஜக அரசு ஒழித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில்  230 உறுப்பினர்களைக் கொண்ட எம்பி சட்டமன்றத்திற்கான தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு நான்கு முறை முதல்வராக பதவிவகித்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான தற்போதைய பாஜக அரசுக்கும், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் கடும்போட்டி நிலவுகிறது.

இதனையொட்டி மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டில் வறுமையை பாஜக அரசு ஒழித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழைகளின் உரிமைகளை பறித்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யும். நாடு, மாநில வளர்ச்சியைவிட காங்கிரஸ் கட்சிக்கு தன் சொந்த நலன் மட்டுமே முக்கியம். காங்கிரஸுக்கு பழங்குடி சமூகத்தின் மீது அக்கறை இல்லை.

இந்தியா கூட்டணியின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சட்டமன்றத்துக்குள் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியிருக்கிறார். அவர்களுக்கு வெட்கமில்லை. அந்த கூட்டணியை சேர்ந்த ஒரு தலைவர் கூட, அவரது பேச்சை கண்டிக்கவில்லை. பெண்க்ள குறித்து இவ்வாறான சிந்தனை கொண்டவர்கள் நாட்டுக்கு நன்மை செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதேபோல் மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி,  “மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசம், சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டமும் அமல்படுத்தப்படும்” என்றார்.