×

 விஜயேந்திரா எடியூரப்பா தலைவராக பதவி ஏற்ற நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக தலைவர்கள்

 

கர்நாடக பாஜக தலைவராக விஜயேந்திரா எடியூரப்பா நேற்று பதவி ஏற்ற நிகழ்ச்சியை பாஜக முக்கிய தலைவர்கள் புறக்கணித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி படுதோல்வி அடைந்ததை எடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிக்கு புதிய தலைவராக விஜயந்திரா எடியூரப்பாவை கடந்த வாரம் டெல்லி தலைமை தேர்ந்தெடுத்தது. இதை அடுத்து கடந்த ஒரு வாரமாக விஜயேந்திரா கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். 

இதை அடுத்து நேற்று பெங்களூரு நகரில் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்று கொண்டார். விஜயேந்திரா பதவி ஏற்பு விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எடியூரப்பா, ஈஸ்வரப்பா, சோபா கரண்லாஜே, உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு இருந்தாலும் அதிருப்தியில் பல முக்கிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் பாஜக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாஜக கட்சி தலைவர் பதவி போட்டிக்கு முதலிடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜக மூத்த தலைவர் அரவிந்த் பெல்லாட், லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவர் பசனகவுடா பாட்டில் யத்தனால், முன்னாள் அமைச்சர்கள் சோமன்னா, சுதாகர், மற்றும் அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளனர். எடியூரப்பா அவரது மகன் என்ற ஒரே காரணத்தினால் விஜேந்திராவுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பலர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இந்த சலசலப்பு பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.