×

  பகிரங்க மன்னிப்புக் கோரிய பாஜக எம்.பி., கங்கனா ரனாவத்..!

 

‘3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும்’ என்கிற தனது பேச்சுக்கு பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.  

நடிகையும், இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத், எதையாவது பேசிவிட்டு பின்னர்சொந்தக் கட்சியினராலே கண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், “எனது இந்தக் கருத்து நிச்சயம் சர்ச்சையாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மூன்று விவசாய சட்டங்களும் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். விவசாயிகளே அதற்கான கோரிக்கைகளை எழுப்ப வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளே முக்கியத் தூண்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டுவர அவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

அவரது இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.  இதனையடுத்து, அவரது கருத்துக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என்றும், கட்சி சார்பாக அத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் பாஜக கண்டித்திருந்தது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, கங்கனா ரனாவத் கூறிய கருத்துகள் அவரின் தனிப்பட்ட அறிக்கை என்றும்,  விவசாய சட்டங்கள் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.  

இந்த நிலையில்   தனது கருத்துகள் குறித்து விளக்கம் அளித்து கங்கனா ரனாவத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  “நிச்சயமாக விவசாய சட்டங்கள் குறித்த எனது கருத்துக்கள் தனிப்பட்டவையே. அவை குறித்த கட்சியின் நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.