×

ராஜஸ்தானில் சிறுமி எரித்துக் கொலை, முதல்வர் அசோக் கெலாட் அரசு பதவி விலக வேண்டும்.. பா.ஜ.க. பெண் எம்.பி. 

 

ராஜஸ்தானில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் அசோக் கெலாட் அரசு பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. பெண் எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் ஷாபுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரா கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலம் கடந்த வாரம் புதன்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கொலை  செய்யப்படுவதற்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கின்றனர். சிறுமி கொலை தொடர்பாக இதுவரை அம்மாநில போலீசார் 7 பேரை கைது செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். ராஜஸ்தானில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும் தேசிய மகளிர் ஆணைய குழு கொடூரரமான குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்டது. கடந்த மாதம் முதல் இப்போது வரை காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க அங்கு தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணை குழு நான்கு முறை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று, நரசிங்கபுரா கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த பா.ஜ.க., சரோஜ் பாண்டே, ரேகா வர்மா, லாக்கெட் சட்டர்ஜி மற்றும் காந்தா கர்தம் பெண் எம்.பி.க்கள் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. 

பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் குழு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினர். அதன் பிறகு பா.ஜ.க. எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், இது கொடூரமானது, அதை எங்களால் வெளிப்படுத்த முடியாது. குடும்பத்தை சந்தித்தேன். வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அரசு அமைதியாக இருக்கிறது. யாரும் ஒரு வார்த்தை பேசுவதில்லை. போலீசார் உஷாராக இருந்திருந்தால், சிறுமியை காப்பாற்றி இருக்கலாம். காங்கிரஸ் மற்ற மாநிலங்களை பற்றி பேசுகிறது, ஆனால் அவர்களின் சொந்த மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை பற்றி பேசவில்லை. முழு நாடும் ராஜஸ்தானை  பார்த்துக் கொண்டிருக்கிறது. கெலாட் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.