×

#BREAKING  திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..  தோஷத்தை நீக்க சிறப்பு யாகம் நடத்திய அர்ச்சகர்கள்!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க அர்ச்சகர்கள் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர்.  

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, 5 நிறுவனங்களிடம் இருந்து நெய் கொள்முதல் செய்துள்ளது. அதுவும் மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு,  திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார்.  

இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.  திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.  நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து புதிதாக நெய் கொள்முதல் செய்யப்பட்டு, நேற்று முதல் புதிதாக லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக, அர்ச்சகர்கள் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தினர்.  காலை 6 மணி முதல் 9 மணி வரை தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு பிரசாதம், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டு விநியோகம் செய்யும் கவுன்ட்டர்கள், 4 மாட வீதிகளில் அர்ச்சகர்கள்  தெளித்தனர். இதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.