தமிழகத்திற்கு நீரை திறந்துவிட முடியாது- சித்தராமையா
தமிழகத்திற்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி வீதம் காவிரி நீரை வழங்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதோடு, தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, “காவிரியில் 28% தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு அளித்த உத்தரவை செயல்படுத்த முடியாது. அதாவது தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீர் திறந்துவிட முடியாது. கர்நாடக அணைகளில் சராசரியை காட்டிலும் நீர் குறைவாக உள்ளது. நீர் குறைவாக உள்ளதை காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று கூட்டத்தில் தெரிவித்தோம். நீர் பற்றாக்குறையை தெரிவித்தும் தமிழகத்தில் தினமும் 1 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு நீரை திறந்துவிட முடியாது.
கர்நாடகாவில் பருவமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், நீர் பற்றாக்குறையானது 28% தான் உள்ளது. இந்த மாதம் இறுதிவரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என காவேரி ஒழுங்காற்றுக் குழுவிடம் கோரிக்கை வைத்திருந்தோம் ஆனால் இன்று முதல் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்றார்.