ஆந்திராவில் வெள்ள பாதிப்புகளை 2வது நாளாக ஆய்வு செய்யும் சந்திரபாபு நாயுடு..
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை இரண்டாவது நாளாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டு வருகிறார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை பொழிந்துள்ளது. அதிலும் ஆந்திர மாநிலம் விஜயவாடா வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் முதல் தளம் அளவிற்கு வெள்ள நீர் புகுந்துள்ளதால், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் இல்லாமலும் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி, ஆறுகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். சாலைகள், ரயில் தண்டவாளாங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகன மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளை படகு மூலம் நேரில் சென்று இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தெற்கு கடலோர ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விஜயவாடா - காசிபேட் இடையே இன்று தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.