×

பாலாற்றில் எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ, அத்தனை அணைகளை கட்டுவோம்- சந்திரபாபு நாயுடு 

 

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்ற பின்னர்  தன்னை 8 முறை எம்.எல்.ஏவாக தொடர்ந்து வெற்றி பெற செய்த குப்பம் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, “குப்பம் தொகுதியில் எனது சமூகத்தினர் இல்லாவிட்டாலும் என்னை இந்த தொகுதியில் 40 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி பெற செய்து உள்ளீர்கள். இதனால் எப்போதும் இல்லாத வகையில் அமைச்சரவையில் 24 பேரில் 8 அமைச்சர் பதவி பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்ற பின் போலவரம் அணைக்கட்டும் பணிகளை ஆய்வு செய்தேன். அதன் பிறகு அமராவதி தலைநகர் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டு அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நேரடியாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். குப்பம் என்றாலே எனக்கு தனித்துவம் மிக்க தொகுதி. நான் எப்பொழுதும் உங்களுக்கு க்டமைப்பட்டுள்ளேன். வரும் ஐந்தாண்டுகளில் அந்த கடனை தீர்க்கும் விதமாக எனது பணிகள் இருக்கும். 

ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் கொண்டு வருவேன். அத்துடன் என்டிஆர் சுஜிலா ஸ்ரவந்தி திட்டத்தின் கீழ் இரண்டு ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் மீண்டும் அமைக்கப்படும். கிராமங்களில் சிமெண்ட் சாலை அமைப்பதோடு விவசாய நிலங்களுக்கும் எளிதில் செல்லும் விதமாக சாலை அமைக்கப்படும். என்.டி. ராமராவ் தொடங்கிய அந்திரி - நிவா திட்டத்தின் கீழ்  ஸ்ரீசைலம் அணையில் இருந்து கிருஷ்ணா நீரை 730 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டு பகுதியில்  உள்ள குப்பத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக பணிகளை மேற்கொண்டேன். எனது ஆட்சியில் குப்பத்திற்கு 30 கிலோமீட்டர் தொலைவு வரை  பணிகள் அனைத்தும்  நிறைவடைந்து வி. கோட்டா வரை கொண்டுவரப்பட்டது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி 5 ஆண்டுகளில் 5 கிலோ மீட்டருக்கு உண்டான பணிகளை மேற்கொண்டு சினிமா ஷூட்டிங் நடத்துவது போன்று தேர்தலுக்கு முன்பு டிராக்டரில் தண்ணீர் கொண்டு பைப்பில் கால்வாயில் நிரப்பினார்கள். அதுவும் முதல்வர் சென்ற பிறகு பைப்பை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டனர். 

கிருஷ்ணா நதியிலிருந்து ஸ்ரீசைலம் வழியாக விரைவில் தண்ணீர் கொண்டு வரப்படும். வருங்காலத்தில் வறட்சி இல்லா பகுதியாக குப்பத்தை கொண்டு வந்து அந்திரி - நிவா திட்டத்தின் மூலம் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பப்படும். இரண்டு இடங்களில் ஒரு டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் விதமாக இரண்டு ஏரி அமைக்கப்படும். பாலாற்றில் எத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்க முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும். தேவைப்பட்டால்  நீர் லிப்ட் இரிகேசன் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். குப்பம் பெங்களூருக்கு இணையான தட்பவெட்ப சூழல்  கொண்டது. இங்கு காய்கறி, பழங்கள், பூ, பட்டு, தக்காளி விவசாயம் மிகவும் சிறப்பாக பயிரிடப்படுகிறது. எனவே விவசாய பொருட்களுக்கான தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்” என்றார்.