×

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து, ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு!

 

2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி கடந்த 9ஆம் தேதி  அதிகாலை 3.30 மணி அளவில் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனு மீதான விசாரணை விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணிநேரமாக நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திராபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவருக்கு செப்டம்பர் 22 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.