×

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? - தொடங்கியது ரேஸ்

 

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வருக்கான ரேஸ் கூட்டணி கட்சிகளிடையே தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய அணி ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்த நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி 216 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களிலும், மற்ற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் ரேஸ் தொடங்கியுள்ளது. அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் பட்னாவிசுக்கு முதல்வர் பதவி என தகவல் வெளியாகி வரும் நிலையில், பெரிய கட்சிக்கு தான் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எங்கும் செய்யப்படவில்லை என தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். அஜித் பவார் தான் முதல்வர் என அவரது மனைவியும்,  அப்பா தான் முதல்வர் என ஷிண்டேவின் மகனும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் என பா.ஜ.கவின் தொண்டர்கள் ஆங்காங்கே வெற்றி முழக்கம் எழுப்பி வருகிறார்கள். இதனால் முதலமைச்சருக்கான ரேஸ் மகாராஷ்டிராவில் தொடங்கியுள்ளது.