×

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்பு!

 

மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சர்களாக முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 132 இடங்களையும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும் கைபற்றியது. இதையடுத்து அதிக இடங்களையும் வென்ற பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் தேவேந்திர ஃபட்னவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிபிரமாணம் செய்துவைத்தார். ஃபட்னவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்கிறார்.

இதேபோல் மராட்டிய மொழியில் உறுதி மொழியை வாசித்து மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களான நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ஷாரூக் கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.