×

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்.-காங்கிரஸ் கனவுகளை பா.ஜ.க. நனவாக்க விடாது.. டி.கே.அருணா  உறுதி
 

 

எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பி.ஆர்.எஸ்.-காங்கிரஸ் கனவுகளை பா.ஜ.க. நனவாக்க விடாது என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் டி.கே.அருணா தெரிவித்தார்.


தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் 119 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. கோமதிரெட்டி வெங்கட்ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்வரும்  தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தெலங்கானாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும். பாரத ராஷ்டிர சமிதியும், காங்கிரஸூம் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தெலங்கானாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்ற காங்கிரஸ் எம்.பி. கோமதிரெட்டி வெங்கட்ரெட்டி கருத்துக்கு பா.ஜ.க. பதில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவர் டி.கே.அருணா கூறியதாவது: எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 80 முதல் 90 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியுடன் தேர்தல் புரிந்துணர்வுக்கு செல்வதற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

தெலங்கானாவில் தேர்தலுக்கு முன்னதாக பி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸூம் ஒரு புரிந்துணர்வுக்க வந்து விடும். மேலும், சூழ்நிலை கோரினால் அவர்கள் பின்னர் அரசாங்கத்தை அமைக்க கூடலாம். ஆனால் பா.ஜ.க. அவர்களின் கனவுகளை நனவாக்க விடாது. அவர்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்க மாட்டோம். காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். தேர்தலுக்கு பிறகு அவர்கள் ஒன்றாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.