×

 மூழ்கிய இளைஞர்கள்..  அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள்.. ராஜஸ்தானில் மழையால் 20 பேர் உயிரிழப்பு..  

 


ராஜஸ்தான் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜெய்ப்பூர், சவாய், மாதோபூர், கரௌலி உள்ளிட்ட இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் ஜெய்ப்பூரில் உள்ள கனோடா அணை நிரம்பி வழியும் நிலையில், அங்கு சென்ற 5 இளைஞர்கள் அதில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இதேபோல் பார்த்பூரின் ஸ்ரீநகர் கிராமத்தில் உள்ள ஆற்றில் அதிகளவு நீர் வந்துகொண்டிருந்த சூழலில், ஆற்று நீரில் மூழ்கி  7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் மற்றொரு நிகழ்வாக  ஆற்று  வெள்ளத்தில் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்துடன்  அடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இதனையடுத்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா, மாநில மக்கள் அனைவரும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் துறையினர் வழங்கும் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.