×

வயநாட்டில் திடீர் நில அதிர்வு - மக்கள் அச்சம்

 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மேப்பாடி, வைத்திரி தாலுகாவில் அன்னப்பாறை, தாழத்து வயலில், பினாங்காடு, நென்மனி,  குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு, குத்தி மலை போன்ற பகுதிகளில் இன்று காலை 10 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கு வசிக்கும் மக்களை குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.