×

“நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது”- தர்மேந்திர பிரதான்

 

நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் விளக்கம் அளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். யுஜிசி நெட் தேர்வைப் போல நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது. தேசிய தேர்வு முகமையின் நடைமுறைகளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு அளிக்கும் பரிந்துரைக்கு பிறகு நீட் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும். பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்த ஒரு சம்பவம், அந்த தேர்வை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கக் கூடாது. முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும். மேலும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைக்கப்படும். முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் உரிய் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வில் அரசியல் செய்யாதீர்கள். நீட் தேர்வை அரசியலாக்க நானும் விரும்பவில்லை. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மையில் எந்த சமரசமும் கிடையாது. இணையதளம் மூலம் யுஜிசி, நெட் வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறிய தவறு கூட நேராதபடி தேர்வுகளை நடத்த உறுதி பூண்டுள்ளோம்” என்றார்.