ஹரியானா சென்றுள்ள இந்திய தேர்தல் ஆணையர்கள் குழு.. சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை..
சட்டமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஹரியானா மாநிலம் சென்றுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ஹரியானா, மராட்டியம், ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சென்றது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களுக்கு செல்லும் தேர்தல் ஆணையர்கள் குழு அந்தந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கையை இறுதி செய்வது, வாக்காளர் பட்டியல் மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப் பயணத்தை முடித்த தேர்தல் ஆணையர்கள் குழு, இன்று ஹரியானா மாநிலத்திற்கு சென்றுள்ளது. ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்தக்குழு அங்கு சென்றுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் சண்டிகரில் தேர்தல் ஹரியானா மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், எத்தனை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பின்னர் இந்தக்குழு முடிவு செய்ய உள்ளது.