×

திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மத ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றம் 

 

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்து மதத்தை தவிர்த்து வேற்று மதத்தை சேர்ந்த பணியாளர்களை வேறு துறைக்கு மாற்றம் செய்ய எடுக்கப்பட்ட முடிவை வரவேற்கிறேன் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய  அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று  சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிஷன் ரெட்டி, ”மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஏழுமலையானை தரிசனம் செய்து ஆசி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் மிகவும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய  வேற்று மதத்தை சேர்ந்தவர்களை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்து எடுக்கப்பட்ட முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. 

எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தை மதிப்பவர்கள் பணிபுரிய வேண்டும். பல இடங்களில் முக்கிய கோயில்களில் வேற்று மதத்தினர் பணி புரிவதால் அங்கு பல்வேறு  சர்ச்சையும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தை சேர்ந்தவர்கள் பணியாளர்களாகவும் சுற்று பகுதியிலும் இருக்க வேண்டும். எனவே தேவஸ்தானத்தில் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது மனப்பூர்வமாக  அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில அரசை பாராட்டுகிறேன். மேலும் திருமலையில் யாராக இருந்தாலும் அரசியல் சார்ந்தும் , சர்ச்சை ஏற்படுத்தும் பேச்சுக்களை பேசக்கூடாது அரசியல் தொடர்பான விவகாரங்கள் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்ற முடிவையும் தேவஸ்தான குழுவில் எடுத்துள்ளனர் இதுவும் வரவேற்கத்தக்கது.

புனிதமாகவும் பக்தர்களின் கலியுக தெய்வமாக கருதக்கூடிய இங்கு அரசியல் பேசக்கூடாது அவ்வாறு பேசினால் வழக்கு பதிவு செய்யப்படும் என முடிவு செய்துள்ளனர் வழக்கு பதிவு மட்டும் செய்யாமல் அவர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதோடு மீண்டும் அவர்களுக்கு சிறப்பு தரிசனங்கள் செய்து வைப்பதற்கு தடை விதித்தும் அறங்காவலர் குழுவில் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு நடந்த சர்ச்சை நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின்  மனதை பாதிக்கும் வகையில் ஏற்பட்டது. அவ்வாறு இனி வருங்காலத்தில் ஏற்படக்கூடாது பல கோடி மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எக்காரணத்திற்கு கொண்டும் ஈடுபடக்கூடாது. 

இதற்காக தேவஸ்தான அறங்காவலர் குழுவும் பிரசாதங்கள் தரம் உயர்த்தவும், பூஜையில் நடைமுறையில் மிகச் சிறப்பாக செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். திருமலையில் சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்துள்ளனர்.  இது சுற்றுலா  தளம் அல்ல மத நம்பிக்கையும் இந்து மதத்தின் மீது அன்பு நம்பிக்கை கொண்டவர்கள் ஆன்மீக உணர்வுடன் வந்து சாமி தரிசனம் செய்யக்கூடிய இடம். சுற்றுலா வருவதற்கான இடமாக கருதக்கூடாது.  திருப்பதி மக்களின் உரிமையாக கருதக்கூடிய சுவாமி தரிசனத்திற்கு மாதத்திற்கு ஒருமுறை அனுமதிக்கும் முடிவும் மிகவும் வரவேற்கத்தக்கது” என தெரிவித்தார்.