கட்டுப்பாட்டை இழந்து காவிரி கால்வாயில் விழுந்த கார்- 5 பேர் பலி
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து காவிரி கால்வாயில் விழுந்ததில், அதில் பயணம் செய்த ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள திப்டூர் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு, ஜெயண்ணா ஆகியோர் மைசூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் காரில் சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த காவிரி கால்வாயில் விழுந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்ததுடன், அவர்களும் ஆற்றுக்குள் விழுந்த காரில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றும் எந்த பலனும் இல்லை.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காவிரி கால்வாயில் இருந்து காரை மீட்டனர் அதில் பயணம் செய்த ஐந்து பேரும் நீரில் மூழ்கி, மூச்சு திணறி உயிரிழந்து காருக்குள் சடலமாக கிடந்தனர். போலீசார் இச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.