×

திருப்பதி லட்டு சர்ச்சை- சிபிஐ விசாரணை தேவை: கருணாகர் ரெட்டி

 

திருப்பதியில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் கலப்படம்  செய்யப்பட்ட குற்றச்சாட்டு சி.பி.ஐ அல்லது உச்சநீதிமன்ற  நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் திருப்பதி  தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான கருணாகர் ரெட்டி   இன்று மாலை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் புனித நீராடி கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றினார். மேலும்  கற்பூரதை கையில் ஏந்தி நான் தலைவராக இருந்தபோது  நெய்யில் கலப்படம்  செய்திருந்தால்  எனது குடும்பமே அழிந்து போகட்டும் என உறுதிமொழி எடுத்தார். மேற்கொண்டு பேச இருந்த நிலையில்  திருமலையில் அரசியல் பேசக்கூடாது என்பதால்  உடனடியாக  போலீசார் அவரை தடுத்து  திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாகர ரெட்டி, “முதல்வர் சந்திரபாபு பெரிய தவறு செய்துவிட்டார். தனது அரசியலுக்காக ஏழுமலையானை பயன்படுத்தி கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை தெரிய வேண்டுமென்றால் சி.பி.ஐ அல்லது  சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும். மூன்று முறை அறங்காவலர் குழு  உறுப்பினராகவும், இரண்டு முறை  தலைவராகவும் கடவுள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். நாங்கள்  இருந்த குழுவில் எந்த தவறும் செய்யவில்லை. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெயும்,மாட்டு,  பன்றிக் கொழுப்பும் கலந்ததாக இ.ஓ.வை கூற வைத்துள்ளனர். சந்திரபாபுவுக்கு மூளையில் வன்மம் நிறைந்துள்ளது. சமூக வலைதளத்தில் லட்டு பிரசாதம் குறித்து  தவறான  பிரச்சாரத்தை  பரப்பினார்கள்” என்றார்.