×

ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: வெள்ளக்காடாக  கட்சியளிக்கும் விஜயவாடா.. 

 


ஆந்திராவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா,  மேற்கு கோதாவரி,  கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு தொடங்கிய கனமழை விடிய விடிய வெளுத்து வாங்கிய நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் சுமார் முதல் தளம் வரை மழை நீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். முக்கிய சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை வெள்ளம் மூழ்கடித்தது.  இதனால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஆந்திராவில் இதுவரை பெய்துவரும்  மழை மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவின் மொஹல்ராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிப்பு ஏற்பட்டு, மலையின் ஒரு பகுதியில் இருந்த  பெரிய கற்கள்  வீடுகள் மீது விழுந்தன. இந்த நிலச்சரிவில் 15 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் இருந்து நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்புகளை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உடனடியாக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.