×

மீண்டும் புயலைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை... “உள்நோக்கம் கொண்டது” - அதானி குழுமம் விளக்கம்!

 

அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்கவைச் சேர்ந்த Hindenburg Research, இந்தியாவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய தலைவர் மாதபி புச்க்கு பங்குகள் இருப்பதாகவும்,  அதானி பங்குகளில் செபி தலைவர் மாதபி புச் முதலீடு செய்திருப்பதாக  Hindenburg Research அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து செபி இந்தியா X அக்கவுண்ட் Protected mode-ல் இயங்கிவருகிறது.

இதனிடையே அதானி குழுமம் முறைகேட்டில் மாதபி புச் உடந்தை என்பதாலேயே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் செபி தலைவர் பதவியை தவறாகப் பயன்படுத்தி மாதபி ஆதாயம் அடைந்து வருவதாக வெளியான குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேபோல் ஹிண்டன்பர்கின் குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம் என அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை தீங்கிழைக்கும் எண்ணம் கொண்டது என விமர்சனம் செய்துள்ளது. தவறான மற்றும் பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்களைத் தேர்ந்தெடுத்து தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும், அதானி குழுமம் உண்மை, சட்டத்தை அலட்சியம் செய்து தனிப்பட்ட லாபம் ஈட்டுவதற்காக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.  அதானி குழுமம் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உறுதியான பிறகும், அதே குற்றச்சாட்டை மறுசுழற்சி செய்து வெளியிடப்பட்டுள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது