×

பொது சுகாதாரத்துறை எப்படி இயங்கும்?? மருத்துவர்கள் பணிக்கு திரும்பனும் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தல்..  

 

‘போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை படித்து வந்த பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 8ம் தேதி நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு  ஆக. 20 விசாரணையை தொடங்கியது. அன்றைய தினம் நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைக்கப்பட்டது.  

தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டதுடன், வழக்கு தொடர்பாக அறிக்கை சமர்பிக்க சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இதையடுத்து, இன்று (ஆக. 22) மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியதும், சிபிஐ நிலை அறிக்கையை தக்கல் செய்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு வர வேண்டும். அவர்களை நாடி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு இயங்கும்?” என்று தெரிவித்தார்.  

அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் (NTF)பயிற்சி மருத்துவர்களும்  பிரதிநிதித்துவப் படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அதனை ஏறுக்கொண்ட நீதிபதிகள்,  சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல்துறை தாக்கல் செய்த நிலை அறிக்கைகளை பதிவு செய்து கொண்டனர்.