×

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் ரூ.500 கோடி வரை முறைகேடு

 

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ.500 கோடி  வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி, “2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை இந்து விரோத ஆட்சியை முதல்வர் ஜெகன்மோகன் நடத்தி வந்தார். நான் ஏதாவது பேசினால் மத கொள்கை கொண்ட பாஜக என கூறி வந்தனர். இருப்பினும் 2020 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக 81 பேர் கொண்ட அறங்காவலர் குழு  நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து கூடுதலாக நியமிக்கப்பட்ட  52 பேர் நியமனத்தை நீதிமன்றம் தடை செய்தது. மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிதியிலிருந்து 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.5 ஆயிரம் கோடி  மாநில அரசுக்கு பாண்டு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் தடுக்கப்பட்டது. அறங்காவலர் குழுவில் குற்ற பின்னணி உள்ளவர்கள் நியமிக்கப்பட்டனர். இதுபோன்று இந்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து ஜெகன்மோகன் ஆட்சியில் நடைபெற்றது.   

அன்னப்பிரசாத கூட்டத்திலும் தரம் இல்லாத அன்னப்பிரசாதம் வழங்கியதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். மிகவும் புனிதமாக கருதப்படும் பிரசாதம் தயார் செய்ய விலங்குகள் கொழுப்பு கலந்த தரமற்ற நெய்யில் செய்யப்பட்டது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு பக்தராக தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு நாளைக்கு 14 டன் நெய் பிரசாதத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த நெய் உரிய பரிசோதனை செய்யப்பட்டு பெறப்பட்டிருக்க வேண்டும். பிரசாதங்கள் கொள்முதல் செய்யக்கூடிய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் 9 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். தரக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் கொள்முதல் பொருட்கள் தரமானதாக இருக்கும். ஆனால் அறங்காவலர் குழுவில் இருந்தவர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு  செயல்பட்டு உள்ளனர். 

வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க முதல்வர் தம்பதிகள் வந்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் ஐந்து ஆண்டுகளில் ஜெகன்மோகன் தம்பதியாக ஒரு முறை கூட வரவில்லை. இதனை கேட்க வேண்டிய அறங்காவலர் குழுவினரும் மௌனம் காத்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த மோசடிகள் குறித்து விஜிலன்ஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி ரூ.500 கோடி  முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பக்தர் தங்க கீரிடம் நன்கொடையாக வழங்கினார். ஆனால் அந்த கீரிடத்திற்கு ஒன்பது மாதத்திற்கு பின்பு ரசீது  வழங்கப்பட்டது. எனவே தங்க நகைகள் குறித்து அதன் இருப்பு, நன்கொடை பெற்றது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இது குறித்தும் விரைவில் அறிக்கை வெளியிடப்படும். 

தேவஸ்தானத்தில் செயல் அதிகாரி, இணை செயல் அதிகாரி என ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே அதிகாரியாக தர்மா ரெட்டி தனது மொத்த அதிகாரத்தையும் ஐந்து அண்டுகள் கையில் வைத்துக்கொண்டார். அவரை வைத்துக்கொண்டு அனைத்து மோசடிகளும் நடைபெற்றது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஆழமான விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த  அனைவரையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.