×

நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்ததாக பொய் கூறுவது நியாயமா?- ஜெகன்மோகன்

 

சந்திரபாபு கூட்டணி ஆட்சியில் 100 நாட்கள் சாதனையாக சொல்ல ஒன்றும் இல்லாததால் அதனை திசை திருப்ப இரண்டு மாதங்களுக்கு பிறகு லட்டு நெய் கலப்படம் செய்ததாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “ஆந்திராவில் தேர்தல் முடிவு ஜுன் 4-ம் தேதி வந்தது. ஜுலை 12-ம் தேதி  சந்திரபாபு முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் ஜுலை 17-ம் தேதி திருப்பதிக்கு டேங்கரில் வந்த நெய் தேவஸ்தானமே மூன்று கட்ட சோதனை மேற்கொண்டு அதில் திருப்தி இல்லாததால் அதனை என்.டி.டி.பி. ( நேஷனல் டைரி டெவலப்மெண்ட் போர்டு )சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கை ஜுலை 23 ம் தேதி வந்தது. 

இந்நிலையில் சந்திரபாபு தலைமையிலான கூட்டணி அரசின் 100 நாட்கள் சாதனை என்று கூற ஒன்றும் இல்லை. மேலும் தேர்தலில் கொடுத்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதி என்ன ஆனது? என மக்கள் கேட்க தொடங்கி உள்ளனர். எனவே அதனை திசை திருப்ப நெய் குறித்த ஆய்வறிக்கையை இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது வெளியிட்டு சந்திரபாபுவின் கேவலமான அரசியல்  அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு தனது தோல்விகளை மறைக்க பொய்யான கதைகளை கூறி வருகிறார். நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார். கடவுளின் பெயரால் தற்போது அரசியல் செய்கின்றனர். திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்..

முதல்வராக இருப்பவர் இப்படி பேசுவது சரியா? கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி அரசியல் ஆதாயம் பார்க்கிறார். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மீது விளையாடுவது தர்மம் இல்லை. லட்டு தயாரிக்கும் பொருள் வாங்கும் செயல்முறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் தேவஸ்தான கொள்கை முடிவின்படி  பெறப்படுகிறது. இதற்காக  ஒப்பந்தம் பெறும் நிறுவனம் என்ஏபிஎல் சான்றிதழுடன் வர வேண்டும். அதன் பிறகு தேவஸ்தானத்தின் மூன்று கட்ட மாதிரிகளை எடுத்து சோதனை செய்கிறது. இந்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பெறப்படுகிறது. ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தாலும் நெய்யை பயன்படுத்த அனுமதி கிடையாடு. இந்த முழுக் கொள்கையும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுபோன்ற நடைமுறைகள் உள்ளபோது விலனஙகு கொழுப்பு கலந்துள்ளதாக சொல்வது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.