திருப்பதி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு- ஜெகன் மோகன் பரபரப்பு பேட்டி
திருப்பதி கோயிலுக்கு செல்ல அனுமதி ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுமதி மறுத்த நிலையில், 5 ஆண்டுகள் முதலமைச்சராக ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்திய நான், எதற்காக கையெழுத்திட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனக் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேவஸ்தான நிபந்தனையின்படி இந்து மதத்தையும் ஏழுமலையான் மீது நம்பிக்கையும் இருப்பதாக கூறி கையொப்பம் செலுத்திய பிறகு தரிசனத்திற்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அலிபிரியில் இருந்து அவரை செல்ல விடமாட்டோம் என பாஜகவுனர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஜெகன் மோகன் ரெட்டி 5 ஆண்டுகள் முதல்வராகவும், அதற்கு முன்பு பலமுறை ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது லட்டுவில் கலப்பட நெய் உறுதி செய்யப்பட்டதால் ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ““5 ஆண்டுகள் முதலமைச்சராக ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்திய நான், எதற்காக கையெழுத்திட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும். என்னை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும் சதி இது. பட்டியலினத்தவர் கூட கோயிலுக்கு செல்லக் கூடாது என நாளை தீண்டாமையை மீண்டும் கொண்டு வருவார்கள்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில்14 முறையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 முறை நெய் தரம் இல்லை என டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இது வழக்கமாக தேவஸ்தானத்தில் உள்ள நடைமுறைதான். தற்பொழுது இதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்” என்றார்.