×

கேரளாவில் மின்னல் தாக்கி இருவர் பலி

 

கேரளாவில் செவ்வாய்க்கிழமை வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி, நேற்று ரெட் அலர்ட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட திருச்சூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கிய நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய துவங்கி உள்ளது. இந்த நிலையில் திருச்சூர் மலப்புறம் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது அப்போது மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதே போல் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதே போல் பாலக்காடு ஒட்டப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வேரோடு மரங்கள் சாய்ந்து வீடுகளுக்கு மேலே விழுந்து பழமையான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் எங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது.

இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.