×

வயநாடு நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 224ஆக உயர்வு 

 

கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

வரலாறு காணாத கன மழையால்  மலைச்சரிவை  புரட்டிய வெள்ளம், வயநாட்டை சின்னாபின்னமாக்கியது. வீடுகள் இருந்த அடையாளமே இல்லாத அளவில், ஒரு செங்கல் கூட இல்லாமல் வீடுகளை பெருவெள்ளம் அடியோடு அடித்து சென்றது. கார்கள் பயணித்த, கிராமத்து தார் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு கிடக்கின்றன. மனிதர்கள் வாழ்ந்த வடு கூட இல்லாமல் வலியையும், வேதனையும் தந்திருக்கிறது நெஞ்சை பிழியும் இந்த பேரிடர் நிகழ்வு. வீடுகளில் அருகில் தூங்கியவர்கள் கதி என்ன ஆனது என்றே தெரியாமல் பலரும், உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வயநாடு மாவட்டத்தில் இன்றும் மழை நீடிப்பு இருப்பினும், மழைக்கு மத்தியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வயநாடு அருகே மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.