பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு.. பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆக.8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும் நாடு முழுவதும் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.