“கொல்கத்தா மருத்துவர் கொலை - பிரதமர் தலையிட வேண்டும்” பறந்த அதிரடி கடிதம்
கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு, அவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க வேண்டும், மருத்துவர்களின் 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளை தடுக்க நாடு தழுவிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.