×

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு- பிரதமரின் பண்டிகைக்கால பரிசு: எல்.முருகன்

 

இந்தியாவின் சகோதரிகளுக்கு சகோதரர் என்ற முறையில் பிரதமரின் பண்டிகைக்கால பரிசு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலைக் குறைப்பு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாடு முழுவதும் உள்ள சகோதரிகளின் நலனை அக்கறை கொண்டு 14.2 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 200 குறைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே சிலிண்டருக்கு ரூ.200 மானியம் பெறும் பயனாளிகளுக்கும் இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எல்.முருகன், இந்தியா முழுவதும் உள்ள தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் ஓணம் பண்டிகை மற்றும் ரக்‌ஷாபந்தனை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளார். அதன்படி இந்தியா முழுவதும் உள்ள 33 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு சிலிண்டருக்கு ரூ. 200 விலை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அத்தோடு உஜ்வாலா திட்டப் பயனாளிகள் ஏற்கனவே பெறும் ரூ. 200 மானியத்தோடு இந்த விலை குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 10.35 கோடி உஜ்வாலா பயனாளிகளும் பயன்பெறுவர். மேலும், 75 லட்சம் பேர் புதியதாக இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர். விழாக்காலத்தில் இது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக வந்துள்ளது. இதற்காக பாரத பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் சகோதரிகளுக்காக சகோதரர் என்ற முறையில் பிரதமர் விழாக்கால பரிசளித்துள்ளார் என்று அமைச்சர் முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.