மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே அளித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இது தொடர்பாக பேசவுள்ளனர். முதல்வர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான ஏக்நாத் ஷிண்டே கடிதத்தை அளித்தார். புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை மகாராஷ்டிராவின் காபந்து முதல்வராக ஏக்நாத் ஷிண்டே செயல்படுவார். தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க ஆர்எஸ்எஸ் பாஜக தலைமைக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர், இரு துணை முதல்வர்கள் என்ற பார்முலா தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 6-7 எம்எல்ஏ.களுக்கு ஒரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து 22-24, சிவசேனா 10-12, தேசியவாத காங்கிரஸ் 8-10 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. துணை முதல்வராக அஜித் பவார் மற்றும் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இருப்பார்கள் என கூறப்படுகிறது.