தேர்தலில் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு திருமண ஏற்பாடு - வேட்பாளர் அதிரடி அறிவிப்பு
தேர்தலில் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வேன் என சரத் பவார் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி கொடுத்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் காலம் நிறைவடையுள்ள நிலையில், புதிய அரசை தேந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய முதலமைச்சராக உள்ள ஏக்னாத் ஷிண்டே பாஜக கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வேன் என சரத் பவார் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி கொடுத்துள்ளது பலரது கவனத்தை பெற்றுள்ளது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி வேட்பாளர் ராஜேசாஹேப் தேஷ்முக் அளித்த வாக்குறுதியில் தெரிவித்ததாவது: நான் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பார்லி தொகுதியில் இளைஞர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வேன். திருமணத்தின்போது ஆண்களின் வேலை குறித்து விசாரிக்கப்படும்; எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்குவேன் என கூறினார்.