×

அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்பட வேண்டாம்- மல்லிகார்ஜுன கார்கே

 

வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதே தலையாய கடமை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிச்சயம் நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என இந்தியா கூட்டணி உறுதியுடன் கூறி வருகிறது. ஆனால் கருத்துக்கணிப்புகள் பாஜகவே வெற்றி பெறும், மோடியே மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பார் எனக் கூறிவருகின்றன.  

இதற்கிடையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “வாக்கு எண்ணிக்கை நாளில் யாருடைய அச்சுறுத்தலுக்கும் இடம்கொடுக்காமல் பணியாற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் அரசியலமைப்பைக் கடைப்பிடித்து தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். யார் மீதும் பயமோ, தயவோ இல்லாமல் பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணும் நாளில், யாருக்கும் பயப்பட வேண்டாம். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களால் எழுதப்பட்ட அரசியலமைப்பிற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

வாக்கு எண்ணும் நாளன்று யாருக்கும் அஞ்சாமல் அரசமைப்புக்கு விரோதமாக அல்லாமல் தங்கள் கடமையை அதிகாரிகள் செய்ய வேண்டும். சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். மக்களின் முடிவே உச்சபட்சமானது. அரசியல்சாசனத்துக்கு உட்பட்டு நாட்டுக்காக தங்களது சேவையை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.