×

"ஒரே நாடு ஒரே தேர்தல் - இந்தியாவை சர்வாதிகார நாடாக்க முயற்சி": மல்லிகார்ஜூன கார்கே

 

ஜனநாயக நாடான இந்தியாவை மெல்ல மெல்ல சர்வாதிகார நாடாக மாற்ற மோடி முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ஜனநாயக நாடான இந்தியாவை மெல்ல மெல்ல சர்வாதிகார நாடாக மாற்ற மோடி முயற்சிக்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் சூழ்ச்சியாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராயும் குழுவில் மாநில அரசுகள் சார்பில் யாரும் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில் 3 குழுக்கள் ஆராயப்பட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நிராகரிக்கப்பட்டது. குழுவில் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி இடம்பெறாதது திகைப்பை ஏற்படுத்துகிறது. தேசிய, மாநில கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் ஒரு தலைப்பட்சமாக இவ்வளவு பெரிய முடிவை எப்படி எடுத்தீர்கள்?

2014 முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற 436 இடைத்தேர்தல்களில் பாஜகவின் அதிகார பேராசையின் பெரும் பங்கு உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைத்து, கட்சித்தாவல் தடைச்சட்டத்தை பலவீனமாக்கிவிட்டது பாஜக. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தை ஒரே நேரத்தில் தீர்மானிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதை பாஜக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. 2014 - 19 வரை அனைத்துத் தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் செலவு செய்த தொகை ரூ.5,500 கோடியாகும். ரூ.5,500 கோடி என்பது அரசின் வரவு செலவு திட்டத்தில் ஒரு பகுதியாகும். ” என்றார்.