×

ஒடிசா விபத்து- ரயிலின் ஓட்டுநா் மீது எவ்வித தவறும் இல்லை: ரயில்வே அதிகாரிகள்

 

ஒடிசாவில் 275 பேரை பலி கொண்ட ரயில் விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநா் மீது எவ்விதத் தவறும் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில்  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலாஷோர் ரயில்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1207 பேரில் 1009 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக ஒடிசா அரசு தகவல் தெரிவித்துள்ளது.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவரது உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநா் மீது எவ்விதத் தவறும் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரணம் அந்த ரயிலின் அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கிலோமீட்டராகும். ஆனால் விபத்து நடந்தபோது ரயில் 128 கிலோமீட்டர் வேகத்தில்தான் சென்றுள்ளது.

விபத்தில் சிக்கிய மற்றொரு ரயிலான ஹவுரா அதிவிரைவு ரயிலும் 126 கிலோ மீட்டர் வேகத்தில் தான் சென்றுள்ளது. ஆகவே இரண்டு ரயில்களும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிவேகத்தில் செல்லவில்லை என்றும், விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநரும், உதவி ஓட்டுநரும் காயத்துடன் உயிா் தப்பியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.