இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் அறிகுறி: சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் அறிகுறி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 1970-களில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, அதன் பின்னா் முடிவுக்கு வந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் அந்நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருந்தாலும், அண்டை நாடுகளில் அத்தகைய பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்களை கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருப்பதாகவும், அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று பரவிய நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு சோதனை செய்யப்பட்டபோது அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.