×

உ.பி.யில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் பலி

 

உ.பி.யின் ஹத்ராஸில் நடந்த மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120-ஐ கடந்தது. இறந்தவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். 

ஹத்ராஸ் அருகே உள்ள ரதிபன்பூரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே இடத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். அப்போது நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த நிலையில், சரியான முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் கடும் தாமதமாகி உள்ளது. அதற்குள் 120 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஹத்ராஸ் மற்றும் அண்டை எட்டா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெளியேறும் பாதை குறுகியதாக இருந்ததால் இச்சம்பவம் நேர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.