×

ரூ.50,000க்கு மேல் ரூ.2000 நோட்டுகளை டெப்பாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம் - ரிசர்வ் வங்கி

 

50,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். 

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிபடியாக குறைந்து வரும் நிலையில், முற்றிலுமாக 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் படும் சிரமங்களை அறிவோம். வங்கிகள் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால், ஒழுங்கு விதிமுறைகள் வெளியிடப்படும். வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக 'பான்' எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும். இந்த பண புழக்கம், நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.