கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..
கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1999ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியப் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது. காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்ட நிலையில், கார்கிலைப் பாதுகாக்க சிறப்புப் படைகள் உள்பட கிட்டத்தட்ட 30,000 வீரர்கள் களமிறக்கப்பட்டு போரிட்டனர். சுமார் இரண்டரை மாதங்கள் தீரத்துடன் பாகிஸ்தானை எதிர்த்து போரிட்டு, ஜூலை 26, 1999 ல் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ராணுவம் விரட்டி அடிக்கப்பட்டது. இந்த போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.
போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக , ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் விஜய் திவாஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்கில் போர் வெற்றி தினத்தின் 25ம் ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கார்கில் வெற்றி தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று லடாக் சென்றுள்ளார். கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். பயணத்தின் ஒரு பகுதியாக, 4.1 கி.,மீ தொலைவில் அமையவுள்ள ஷிங்குன் லா இரட்டை குழாய் சுரங்கப்பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.