×

என்னை கல்லறையில் புதைக்க காங்கிரஸ் கனவு காண்கிறது- மோடி

 

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடிவருகிறது.

 காங்கிரஸ் கோட்டையான கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி பொதுமக்கள், பாஜகவினர் வரவேற்றனர். தொடர்ந்து பெங்களூரு- மைசூரு இடையே ரூ.8,480 கோடி செலவில், 118 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள  10 வழிச்சாலையை பிரதமர் மோடி அர்ப்பணித்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் நான் உழைத்துக்கொண்டிருக்கும் நிலையில்  எனக்கு கல்லறை தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. மோடிக்கும். பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால் பெங்களூரு- மைசூரு நெடுஞ்சாலை அமைப்பதில் நான் தீவிரமாக இருந்தேன். நான் எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறேன். எளிய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. ஏழை மக்களை அழிப்பதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பையும் காங்கிரஸ் விடவில்லை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமின்றி ஜனநாயகத்தின் தாயாகவும் விளங்குகிறது. லண்டனில் இருந்து கொண்டு இந்திய ஜனநாயகத்தை கேள்வி எழுப்புவது துரதிருஷ்டவசமானது. இந்திய ஜனநாயகம் பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உலகின் சக்திவாய்ந்த டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்று. ஏழைகளுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதுடன் எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” எனக் கூறினார்.