"லட்சக் கணக்காண மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது?" -நீட் முறைகேடு குறித்து பிரியங்கா காந்தி கேள்வி
நீட் தேர்வு முறைகேடு குறித்து பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத் தாள் கசிந்தது, தற்போது நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருவது, நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது உள்ளிட்டவை நீட் தேர்வு முறை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. “இதன் மூலம் நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?;
நீட் தேர்வு முடிவுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்;
நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரித்து தீர்வு காண்பது பாஜக அரசின் பொறுப்பு”
மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளிவரும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.