×

ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

 

திருப்பதியில் லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தங்கி இருக்கும் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் உள்ள வீட்டின் முன்பு  ஏராளமான இந்து அமைப்பினர்  மற்றும் பாஜக இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ​ லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக  ஆய்வக அறிக்கை வெளியான நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால், ஏராளமான இந்துக்களும், பாஜக இளைஞரணி தொண்டர்களும் ஜெகன் மோகன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர்.

ஜெகன் மோகன் வீட்டு வாயில் மீது செருப்புகளை வீசியும், காவி நிற பெயிண்ட் ஸ்ப்ரே செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்து தாடேப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஜெகன் மோகன் வீட்டின் மீது தாக்கப்பட்டதற்கு ஒய்.சி.பியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஜனநாயகத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்புடையது அல்ல என்றனர். இதனையடுத்து ஜெகன்மோகன் வீட்டு வாயிலில் உள்ள காவி நிறத்தை ஊழியர்கள் அகற்றினர்.  எனினும் இந்த தாக்குதலில் பாதுகாப்பு அறைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இருப்பினும் இந்த  தாக்குதல் நடந்த போது ஜெகன் மோகன் ரெட்டி அந்த வீட்டில் இல்லை.