×

அதானியை கைது செய்யும் திறமை மோடிக்கு இல்லை- ராகுல்காந்தி

 

பிரதமர் மோடிக்கு அதானியை கைது செய்யும் திறன் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு  சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ள அதானி குழுமம், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியமும், அதானியிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை, மத்திய அரசிடமிருந்துதான் மின்சாரம் கொள்முதல் செய்கிறோம் என விளக்கம் அளித்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடிக்கு அதானியை கைது செய்யும் திறன் இல்லை. அதானி என்ன செய்தாலும், பிரதமரும், அவரது நெட்வொர்க்கும் பாதுகாக்கின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதானி நாட்டையே ஹை-ஜாக் செய்கிறார். அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார், முறைகேட்டில் பிரதமர் மோடியும் ஈடுபடுகிறார். அதானி அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களை மீறியுள்ளார்! எனினும் எப்படி அவர் சுதந்திரமாக இந்தியாவிற்குள் சுற்றுகிறார்? எனத் தெரியவில்லை. இந்த நாட்டில் முதலமைச்சர்கள்கூட கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் அதானி சுதந்திரமாக சுற்றுகிறார்” என்றார்.