×

நீட் தேர்வு முறைகேடு- மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன்: ராகுல்காந்தி

 

மோடி அரசு பதவியேற்கும் முன்பே நீட் தேர்வில் நடந்த முறைகேடு 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை குலையவைத்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.


நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 


இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “மோடி அரசு பதவியேற்கும் முன்பே நீட் தேர்வில் நடந்த முறைகேடு 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை குலையவைத்துள்ளது. ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பல மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளை தடுக்க, காங்கிரஸ் சிறந்த திட்டத்தை முன்வைத்தது. மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன் என உறுதி அளிக்கிறேன். இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் குரல் நெறிபடுவதை இந்தியா கூட்டணி அனுமதிக்காது” எனக் கூறியுள்ளார்.