காங்கிரஸின் பெரும்பாலான திட்டங்கள் பெண்களுக்கானதாக இருக்கிறது- ராகுல் காந்தி
கர்நாடகாவில் ஆன்லைன் மூலம் மகளிருக்கு ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, “இந்திய நிலத்தை சீனா ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது பொய். லடாக் பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக அம்மக்கள் அனைவரும் கூறுகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தையும், அக்சய்சின் பகுதியையும் இணைத்து சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான பிரச்சனை. இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொய் சொல்லி வருகிறார்.
இதுபற்றி பிரதமர் மோடி உண்மை பேச வேண்டும். கர்நாடகாவில் பெண்கள் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்துக்கொண்டேன். பாரத் ஜடோ யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான பெண்களை சந்தித்தபோது இந்த உண்மை புரிந்தது . காங்கிரஸின் பெரும்பாலான திட்டங்கள் பெண்களுக்கானதாக இருக்கிறது.
ஏழைகளுக்காகவும், பலவீனமானவர்களுக்காகவும், அரசு செயல்பட வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அப்படி அல்ல, மத்தியில் உள்ள அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே பணியாற்றுகிறது. யோஜனா, பெண்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பணப் பரிமாற்றத் திட்டமாகும். மேலும், இப்போது இந்த கர்நாடக மாதிரி - பெண்களை மையமாகக் கொண்ட முறையை இந்தியா முழுவதும் செயல்படுத்தப் போகிறோம்” என்றார்.