×

திருப்பதி லட்டு-சந்திரபாபு நாயுடு அரசியல் செய்ய முயற்சிக்கிறார்: ரோஜா

 

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு,  மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.  திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா, “தேர்தல் நேரத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்களை திசைத்திருப்ப இந்த லட்டு விஷயத்தை கையில் எடுத்துள்ளார். இந்த மாதிரி தப்பு நடத்திருந்தால் உடனையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்தவர்களை தண்டித்திருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. எந்த பூஜை பண்ணினாலும் ஷூ போட்டு தான் செய்வார். அவர் கடவுளோடு விளையாடி இருக்கிறார். 

இதுவரை சாதி அரசியல் செய்துவந்தவர் இப்போது மத அரசியல் செய்கிறார். திருப்பதி லட்டில் எந்தவித கலப்படமும் இல்லை. சனாதனம் பற்றி பேசும் பவன் கல்யாண், அவர் வீட்டில் அதை கடைபிடிப்பதில்லை. உண்மையிலேயே திருப்பதி லட்டில் கலப்படம் என்றால் சிபிஐ விசாரணை கோருங்கள். சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.