எஸ்பிஐ லாக்கரை உடைத்து 497 கஸ்டமர்களின் 19 கிலோ நகைகள் கொள்ளை
தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராயபார்த்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நடந்த கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து லாக்கரில் இருந்து ரு.14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராயபர்த்தியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் பாதுகாவலர் இல்லாததை நோட்டம் விட்ட கொள்ளையர்கள் முதலில் அலாரம் ஒயர்களை அறுத்துள்ளனர். பின்னர் வங்கிக்குள் நுழைய ஜன்னல் கம்பிகளை உடைத்து இரும்பு கிரில் அகற்றப்பட்டு அதன் வழியாக வங்கியில் உள்ளே சென்றுள்ளனர். பின்னர் சிசிடிவி கேமராக்களின் ஒயர்கள் அகற்றப்பட்டு அதன் ரெக்கார்டர்களை கையுடன் எடுத்து கொண்டுள்ளனர். பின்னர் வங்கியில் மூன்று பாதுகாப்பு லாக்கர்கள் இருந்த நிலையில், தாங்கள் கொண்டு வந்த கேஸ் கட்டர் மூலம் ஒரு லாக்கரை வெட்டி திறந்து இதில் 497 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் ரூ.14.94 கோடி மதிப்புள்ள 19 கிலோ தங்க நகைகள் எடுத்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
லாக்கரை திறக்க பயன்படுத்திய கேஸ் கட்டர் வங்கியிலேயே விட்டு சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் இதைப் பார்த்து உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். வர்த்தண்ணப்பேட்டை இன்ஸ்பெக்டர் சீனிவாசராவ், ராயபர்த்தி, வர்த்தனப்பேட்டை எஸ்.ஐ.க்கள் ஷ்ரவன்குமார், ராஜூ ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த திருட்டு குறித்து அறிந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்தனர். வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். வங்கி அதிகாரிகளின் புகாரின்படி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மேற்கு மண்டல டிசிபி ராஜமகேந்திர நாயக் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இந்த வங்கியில் திருட முயன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து ஒரு தனியார் செக்யூரிட்டி நியமிக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கு முன்பு அவர் பணியில் இருந்து விலகிய பின்னர், மீண்டும் வங்கி அதிகாரிகள் யாரையும் நியமிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் இதனை கண்காணித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.